டில்லி

நிலக்கரி ஊழலில் தொடர்புள்ளதாக 3 அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட மூத்த பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிபிஐ விசாரணை முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.

பிரகாஷ் இண்டஸ்டிரிஸ் என்னும் நிறுவனத்தின் மீது கடந்த 2008 ஆம், வருடம் நிலக்கரி கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக 2014 ஆம் வருடம் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.  அத்துடன் இன்னொரு நிறுவனத்தின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.  இந்த வழக்கில் பிரகாஷ் இண்டஸ்டிரிஸ் நிறுவன இயக்குநர்களான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மூத்த பாஜக தலைவர்களான ஹன்ஸ் ராஜ் ஆகிர் மற்றும் புபேந்தர் யாதவ் மீது வழக்கு தொடரப்பட்டது,

கடந்த 2016 ஆம் ஆண்டு இவர்கள் மீது எவ்வித சாட்சியங்களும் இல்லை எனக் கூறி சிபிஐ இந்த வழக்கை முடித்தது.

இந்த நிலக்கரி ஊழல் வழக்கில் அப்போது நிலக்கரி கொள்முதலுக்கு பொறுப்பாக இருந்த எச் சி குப்தா, கே எஸ் கிரோபா மற்றும் கே சி சாமானியா ஆகியோருக்கு தொடர்பு உள்ளதால் அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய சிபி ஐ முடிவு செய்தது. தற்போது இந்த மூவரில் குப்தா மற்றும் கிரோபா ஆகிய இருவரும் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

ஆனால் சிபிஐ விசாரணையில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதற்குக் காரணம் இந்த மூவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இந்த அனுமதி வழங்காத பின்னணியில் முன்பு குற்றம் சாட்டப்பட்டு தற்போது வழக்கு ரத்து செய்யப்பட்ட மூன்று பாஜக தலைவர்களும் உள்ளதாகப் பெயர் தெரிவிக்க விரும்பாத சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு 7 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய புலனாய்வுத் துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில் பிரகாஷ் இண்டஸ்டிரிஸ் மீது நிலக்கரி கொள்முதலில் ஊழல் செய்ததாக வழக்கு  பதியப்பட்டது.  இதே புகாரை இந்த நிறுவனத்தின் மீது பாஜக உறுப்பினர்கள் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அளித்துள்ளனர்.

எனவே பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே இந்த நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தக் கோரி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.