டில்லி

சிபிஐ காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு ஏசி, மெத்தை,  தொலைக்காட்சி உள்ளிட்ட பல வசதிகளுடன் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சிபிஐ விசாரணைக்கு எடுக்கப்படும் கைதிகள் ஒரு அரசியல்வாதியாக இருப்பினும் அல்லது பெரிய தொழிலதிபராக இருப்பினும்  அவர்களை லாக் அப் பில் அடைத்து வைப்பது வழக்கமாகும். அங்கு அவர்கள் தரையில் படுத்து உறங்க வேண்டும். அவர்களுக்குச் செய்தித்தாள், மற்றும் தொலைக்காட்சி வசதிகள் கிடையாது. அவர்கள் எப்போதும் கண்காணிப்பு காமிரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள். வீட்டுக்கு தொலைப்பேசியில் அழைத்துப் பேச உரிமை கிடையாது.

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் ஐ என் எக்ஸ் ஊடகம் வெளிநாட்டு  முதலீடுகளைப் பெறச் சலுகை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அவர் மேலே குறிப்பிட்டது போல லாக் அப் பில் அடைத்து வைக்கப்படவில்லை எனச் செய்திகள் வந்துள்ளன. மாறாக அவர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து அனைத்து வசதிகளும் நிறைந்த சிபிஐ விருந்தினர் மாளிகை அறை எண் 3 இல் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அறையில் தொலைக்காட்சிப் பெட்டி, சோபா, ஒரு இரட்டை படுக்கை , இணைக்கப்பட்ட குளியல் மற்றும் கழிவறை ஆகியவை உள்ளன. இந்த விருந்தினர் மாளிகையை சி பி ஐ வெளியூரில் இருந்து வரும் அதிகாரிகள் மற்றும் மாறுதல் அடைந்து வீடு வசதி அளிக்கப்படாத உயர் அதிகாரிகள் தங்கப் பயன்படுத்தும் இடமாகும். அத்துடன் கைதிகளை வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் அதிகாரிகளைத் தங்க வைக்கவும் இந்த மாளிகை பயன்படுத்தப்படுகிறது.

சிபிஐ அதிகாரி ஒருவரின் தகவலின் படி சிதம்பரத்திடம் தினம் 10-12 கேள்விகள் வரை மட்டுமே கேட்கப்படுகின்றன. அவற்றுக்கு அவர் அளிக்கும் பதில்கள் மிகவும் நீண்டதாக உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு சில கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்களுக்குத் தேவையான பல ஆவணங்களைச் சரி பார்ப்பதிலும் அதிக நேரம் ஆகிறதாம். ஒரு சில நேரங்களில் கேள்விக்கும் பதிலுக்கும் தொடர்பு இல்லாததால் அந்த கேள்விகள் மீண்டும் கேட்கப்படுவதாலும்  அதிக நேரம் செல்கிறது என அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “விசாரணை மேஜையின் ஒரு பக்கம் அதிகாரிகளும் எதிர்ப்பக்கம் சிதம்பரமும் அமர்வது வழக்கமாகும். ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது அது தொடர்பாக மற்றொரு கேள்வியையும் அதிகாரி கேட்பார்.  ஏற்கனவே கேள்விகள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர வேறு கேள்விகள் கேட்க அதிகாரிக்கு உரிமை உண்டு. இந்த விசரணை மாலை வரை நடக்க வேண்டும் என்றாலும் ஒரு சில நேரங்களில் இரவு வரை நடப்பதும் உண்டு. அப்போது சிதம்பரம் அங்கிருக்கும் சோபாவில் படுத்து உறங்கி விடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

Thanz : THE PRINT