டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) முறைகேடு தொடர்பாக ஆர்பிஐ முன்னாள் துணை கவர்னரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது வரை இதில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 5,300 கோடி ரொக்கம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கி இருப்பதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை இந்தியா கொண்டு வர சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக ஆர்பிஐ அதிகாரிகள் சிலரிடம் சிபிஐ நேற்று விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

தற்போது ஆர்பிஐ முன்னாள் துணை கவர்னர் ஹெச்.ஆர்.கானிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நீரவ் மோடி கடன் பெற உதவியாக ஆவணங்களை மாற்றியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் இவரது பங்கு எவ்வ்ளவு?, எவ்வளவு பணம் கைமாறியது? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.