குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக விஜயபாஸ்கரின் மற்றொரு உதவியாளர் சீனிவாசனின் வீட்டில்  சி.பி.ஐ. சோதனை நடத்தியிருக்கிறது.  சீனிவாசன் வீடு சென்னை வளசரவாக்கத்தில் உள்ளது.

இதே போல் வழக்கறிஞர் வேலுகார்த்திக் என்பவர் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. சென்னை மட்டுமின்றி தஞ்சாவூரில் உள்ள வேலுகார்த்திக்கின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சசிகலாவின் தூரத்து உறவினரான  வேலுகார்த்திக், திவாகரனின் நெருங்கிய நண்பரும்கூட.  வேலுகார்த்திக்கிடம் கடந்த ஞாயிற்றுகிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

2015ம்  வருடம் குட்கா வழக்கில் ராஜேந்திரன் என்பவருக்கு வேலுகார்த்திகேயன் ஜாமீன் பெற்று கொடுத்திருக்கிறார்.  அதுதொடர்பான வழக்கு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அமைச்சர், உதவியாளர் முக்கிய அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டுகள் நடந்ததும் பரபரப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.