சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு!

டில்லி:

த்திய புலனாய்வு பிரிவான சிபிஐ-ல் அதன்  இயக்குனர்களியே ஏற்பட்ட மோதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா  மற்றும் சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானா கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப் பட்டு உள்ளது.

இந்த நிலையில், லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். நேற்று அவரது அலுவலக அறை மற்றும் அவருடைய உதவியாளர்கள் அறைகளில் ரெய்டு நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருப்பு பண நிதி மோசடி தொடர்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீது சிபிஐ பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளை விசாரித்து வந்த சிபிஐ, வழக்கை  நீர்த்துப் போக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு இடைத்தரகர் மூலம் ரூ.3 கோடியை மொயின் குரேஷி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த புகார் தொடர்பாக இடைத்தரகர் மனோஜ் பிரசாத் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடைபெற்ற விசாரணையின்போது, மாஜிஸ்திரேட் முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தில் ரூ.2 கோடி லஞ்சம் அளித்ததாகக் கூறினார்.

இதையடுத்து,ராகேஷ் அஸ்தானா மற்றும் சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர குமார் மீது கடந்த 15-ம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில் தேவேந்திர குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி சிபிஐ இயக்குனருக்கு பிரதமர்  மோடி அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து கடந்த  21-ம் தேதி அலோக் வர்மா பிரதமரை சந்தித்துப் பேசினார்.

அப்போது பிரதமர் மோடியிடம்,  சிபிஐ பணிக்கு ராகேஷ் அஸ்தானா தகுதியில்லாதவர். பல கோடி ஊழல் வழக்கில் அவர் மீதான விசாரணை நிலுவையில் இருப்பதால் அவரை மீண்டும் குஜராத் காவல் பணிக்கு அனுப்பு மாறு பிரதமரிடம் அலோக் வர்மா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த அஸ்தானா, பதிலடியாக அலோக் வர்மா லஞ்சம் வாங்கியதாக கேபினட் செயலாளர், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு புகார்களை தட்டிவிட்டார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி சந்தி சிரித்த நிலையில், தன்னை கைது செய்துவிடுவார்களோ என அஞ்சி,  ராகேஷை  அஸ்தானா டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை 29ந்தேதி நடைபெறும் என்றும், அதுவரை தற்போதையே நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆதரவு ஊழியர்கள் மற்றும் வெளியாட்கள் அலுவலகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று அஸ்தானா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும்,  சிபிஐ தலைமை அலுவலகத்தின் 11 வது தளத்தில் உள்ள அலோக் வர்மாவின் அலுவல அறைகளில் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடக்கும் சமயத்தில் ஆலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆதரவு ஊழியர்களை அலுவலகத்திற்குள் அனுமதித்தால் அவர்கள் ஆதாரங்களை மறைத்து விட வாய்ப்புள்ளதால் இந்த கண்காணிப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்துடன் சி.பி.ஐ., அலுவலகத்தின் 10வது மற்றும் 11வது தளங்களுக்கு யாரும் செல்லாமல் இருக்க சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.