பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான  டி.கே. சிவகுமார் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது. மேலும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் வீடு அலுவலகங்கள் உள்பட 15 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.  இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோதமாக பணம் சேர்த்தது தொடர்பாக சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகள் பதிவு செய்து, ஏற்கனவே ரெய்டு நடத்தியது. மேலும், அவரது ஆதரவாளர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எடியூரப்பா தலைமையிலான மாநில அரசும்,  கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் 25-ந் தேதி டி.கே.சிவக்குமார் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தது. அதன்படி  சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள்,  கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சதாசிவ நகர், தொட்டலஹள்ளி, கனகபுரா பகுதியில் உள்ள டி.கே.சிவகுமார் வீடுகளில்    மற்றும் அவரது அலுவலகம்  மற்றும், அவரது குடும்பத்தினர் வீடுகள் உள்பட 15 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக அரசின் கைப்பாவையாக சிபிஐ செயல்படுவதாக அவர் கூறி உள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார்.