சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு: தமிழக அரசுக்கு தலைகுனிவு

சென்னை:

மிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், சிபிஐ விசாரிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

சென்னை உயர்நீதி மன்றத்தை மீறி, அரசாணை வெளியிட்ட  தமிழக அரசுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிலைக் கடத்தல், மற்றும் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு  தொடர்பான வழக்குகளை, சென்னை உயர்நீதி மன்றம் அமைத்த,  ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு  விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த குழுவினர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக அரண்டு போன தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறை உயர் அதிகாரிகள், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வழக்கை  பொன் மாணிக்க வேலிடம் இருந்து மாற்ற முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், சென்னை உயர்நீதி மன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், பொன்மாணிக்க வேல் அரசுக்கு எந்தவித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என்றும், ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று நீதிமன்றத்தில்  குற்றம்சாட்டப்பட்டது.

இதன் காரணமாக  சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக அறிவித்த தமிழக அரசு, கடந்த மாதம் (ஆகஸ்டு) 1ந் தேதி, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து, அரசாணைக்கு  இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,   சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மறுத்து, தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகம் என்பதாலும், பணிச்சுமை அதிகம் இருப்பதாலும் வழக்கை ஏற்க முடியாது எனவும், ஆனால் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக வும் சி.பி.ஐயின் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக நீதிபதிகள் கூறினர்.

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் முன் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் முதலில் அரசாணை பிறப்பித்தது ஏன்?  என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் கேள்வி , சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியது தொடர்பாக விளக்கம் தேவை என்று கூறி,  வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்சேபனையை மீறி, சிபிஐ விசாரணைக்கு தன்னிச்சையாக உத்தரவிட்ட தமிழக அரசின் கோரிக்கையை சிபிஐ விசாரிக்க மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.