சென்னை:

103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தங்கம் மாயமான வழக்கு சூடு பிடித்துள்ளது.

சென்னையில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சுரானா நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

இதில் 400.47 கிலோ தங்கம் சிக்கியது. சட்ட விரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்த நகைகளை சுரானா நிறுவனத்தில் லாக்கரில் வைத்திருந்தனர். இந்த நகைகளில் 103.86 கிலோ தங்கம் மாயமானது. அது எப்படி காணாமல் போனது என்பது தெரியவில்லை. இதுபற்றிய அதிர்ச்சி தகவல் சமீபத்தில்தான் தெரிய வந்தது.

இதையடுத்து 103 கிலோ தங்கம் மாயமானது பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தங்கம் மாயமான வழக்கு சூடு பிடித்துள்ளது.

லாக்கரில் இருந்த தங்கம் காணாமல் போனது எப்படி? என்பது பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

சி.பி.ஐ. அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் சிக்குவார்களா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.