சோராபுதின் என்கவுண்டர் : குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை

மும்பை

சோராபுதீன் என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் காவல்துறையினர் கடந்த 2005 ஆம் ஆண்டு  நவம்பர் 22 ஆம் தேதி சோரபுதின் ஷேக், அவர் மனைவி கவுசர்பீ ஆகியோரை கைது செய்தனர்.    அவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டு அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்பட்டது.    சோராபுதீன் கைது செய்யப்பட்ட நான்காம் தினம் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

அதன் பிறகு தலைமறைவாகியதாக கூறப்பட்ட கவுசர்பீ மேலும் 4 நாட்கள் கழித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.   அத்துடன் இவர்களது கூட்டாளி என கூறப்படும் துளசிராம் பிரஜாபதி 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி அன்று குஜராத் – ராஜஸ்தான் எல்லையில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.  இவை அனைத்தும்  போலி என்கவுண்டர் என சோராபுதின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது.    சிபிஐ அளித்த குற்றப்பத்திரிகையில் என்கவுண்டர் நடந்த சமயத்தில் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா , மற்றும் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் கட்டாரியா  உள்ளிட்ட 38 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.   கடந்த 2010 ஆம் வருடம் ஜூலை மாதம் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமித்ஷா இரு மாதங்களுக்கு பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு நியாயமாக நடக்க குஜராத்தில் இருந்து மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்து வழக்கு மும்பை சிபிஐ நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.    மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  அமித்ஷா மற்றும் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் கட்டாரியா அகிய 16 பேரை 2014 ஆம் ஆண்டு போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கூறி விடுதலை செய்தது.

அதன் பிறகு விசாரணை தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி தீர்ப்பு வரும் என எதிர்பர்க்கப்பட்ட நிலையில் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சர்மா அறிவித்தார்.   அவர் இன்று அளித்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேருக்கு எதிராக எந்த ஒரு வலுவான ஆதாரங்களையும் சிபிஐ அளிக்காததால் அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார்.