Random image

குட்கா வழக்கு: 2 காவல் அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன்

சென்னை:

மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள  குட்கா வழக்கில் சிபிஐ 5 பேரை கைது செய்துள்ளது. இந்த நிலையில், குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை  திருட்டுத்தனமாக விற்பனை செய்ய அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா  மற்றும் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் வீடு உள்பட பல இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது.

இந்த ஊழல் தொடர்பாக குட்கா  குடோன் அதிபர் மாதவராவ், அவரது தொழில் கூட்டாளிகளான பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும், அதிகாரிகளான செந்தில் முருகன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து சிபிஐ  விசாரித்து வருகிறது.

இநத நிலையில், குட்கா ஊழல் சம்பந்தமாக டிஎஸ்பி மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.  அவர்களிடம்   சிபிஐ நடத்தும்  விசாரணையை தொடர்ந்து, குட்கா ஊழல் வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னர் மன்னன் தற்போது மதுரை ரயில்வே டிஎஸ்பியாகவும், சம்பத்குமார் தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இது தமிழக காவல்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.