கர்நாடக எம் எல் ஏக்கள் போன் ஒட்டுக்கேட்பு : சிபிஐ விசாரணை

பெங்களூரு

ர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகார விசாரனை சிபிஐ இடம் ஒப்படைக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா கூறி உள்ளார்

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மஜத – காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவை 14 மாதங்கள் ஆட்சி செய்தது.    அந்த கால கட்டத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட  பல கட்சியின் முக்கிய தலைவர்கள் தொலைபேசிகள்  ஒட்டுக் கேட்கப்பட்டதாகப்  புகார் எழுந்தது.  இந்த புகாரை முதலில் பாஜகவின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அசோக் தெரிவித்தார்.  அதைத் தொடர்ந்து தற்போது தகுதி நீக்கம் செய்ய்யப்பட்ட  சட்டப்பேரவை உறுப்பினர் விஸ்வநாத் இதே புகாரைத் தெரிவித்தார்.

இந்த புகார் கர்நாடக அரசியலில் கடும் சர்ச்சையைக் கிளம்பியது.  ஆயினும் முன்னாள் முதல்வர் குமாரசாமி அப்போது பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.  தற்போது பதவி இழந்த நிலையில் அவர் தனது டிவிட்டரில், “நான் முதல்வராக இருந்த போதே அந்த பதவி நிரந்தரம் இல்லை எனக் கூறி வந்தேன்.   எனவே எந்த ஒரு  எதிர்க்கட்சியினர் தொலைப்பேசியையும் ஒட்டுக் கேட்டு பதவியைக் காக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை.   இந்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது” எனப் பதிந்திருந்தார்.

தற்போதைய பாஜக முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம், “இதற்கு முந்தைய அரசின் சட்டப்பேரவை  உறுப்பினர்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாகப் புகார்கள் வந்துள்ளன.  இதையொட்டி காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் உள்ளிட்ட பலர் விசாரணை நடத்த வலியுறுத்தி வருகின்றனர். எனவே இந்த விவகாரம் சிபிஐயின் விசாரணைக்கு அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.