டில்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் ஆட்சியின்போது, இந்திய ராணுவத்துக்கு வாங்கப்பட்ட ஃபோபர்ஸ் பீரங்கி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், டில்லி உயர்நீதி மன்றம் வழக்கை ஏற்கனவே முடித்து வைத்துள்ள நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதும் சுமார் 12 ஆண்களுக்கு பிறகு மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்தது.

அதைத்தொடர்ந்து, சிபிஐ போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.  டில்லி உயர்நீதி மன்றத்திலும் மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில், தற்போது ஏற்பட்டு வரும் அரசியல் நிகழ்வுகளை கருத்தில்கொண்டு, சிபிஐ, தனது மனுவை திரும்ப பெறுவதாக டில்லி உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதுபோல, அஜய் அகர்வால் என்ற தனிநபர் டில்லி உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்திருந்த போபர்ஸ் விசாரணை கோரிய மனுவை திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளார்.

போஃபர்ஸ் கடந்து வந்த பாதை…

கடந்த 1986–ம் ஆண்டு, காங்கிஸ் தலைமையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில், போபர்ஸ் என்ற சுவீடன் நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு பீரங்கிகள் வாங்கப்பட்டன.

இதில், ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான இத்தாலிய தொழிலதிபரான ஆட்டோவியோ குவாத்ரோச்சி ((Ottavio Quattrocchi)) இடைத்தரகராக செயல்பட்டதாகவும், சுவீடன் போஃபர்ஸ் நிறுவனம் 64 கோடி ரூபாயை அரசியல்வாதிகளுக்கும், பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் லஞ்சமாக வழங்கியதாகவும் புகார் எழுந்தது.  லஞ்சப்பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்ட தாகவும் குற்றச்சாட்டு எழுந்து இந்திய அரசியலையே புரட்டிப்போட்டது.

அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, 1989ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வி யடைந்ததற்கு போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த வழக்கில் போஃபர்ஸ் நிறுவனமும் மற்றும் தொழிலதிபர்களும் ஹிந்துஜா சகோதரர்களு மான ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ் சந்த் ஆகியோரும், 2005ஆம் ஆண்டில் டெல்லி உயர்நீதி மன்றத்தால் குற்றசாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2004–ம் ஆண்டு பிப்ரவரி 4–ந் தேதி, டெல்லி உயர் நீதிமன்றம், ராஜீவ் காந்தியை வழக்கில் இருந்து விடுவித்தது. போபர்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது.

ஆனால், அடுத்த ஆண்டு (2005) மே 31–ந் தேதி, இந்துஜா சகோதரர்கள், ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ்சந்த் ஆகியோருக்கும், போபர்ஸ் நிறுவனத்து எதிரான வழக்கை ரத்து செய்ய டெல்லி  உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

மேலும், வழக்கை சி.பி.ஐ. கையாண்ட விதத்துக்காக கண்டனம் தெரிவித்தது. சி.பி.ஐ.யால், ரூ.250 கோடி அரசுப்பணம் வீணாகி விட்டதாகவும் கூறியது.

இந்த உத்தரவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசிடம் சி.பி.ஐ. அனுமதி கோரியது. ஆனால், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதும், போஃபர்ஸ் பீரங்கி விவகாரத்தை மீண்டும் தோண்டி எடுத்தது. வழக்கு முடிந்து 12 ஆண்டுகள் ஓடிவிட்ட  நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில்  டில்லி உயர்நீதி மன்றத்திலும் மீண்டும் விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசியல்கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில், போஃபேர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பான மறுவிசாரணைக்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ்பெறுவதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.