சிவிசி அறிக்கை மீது அலோக் வர்மா பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி:

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

விசாரணையின்போது,  சி.வி.சி அறிக்கை தொடர்பாக அலோக் வர்மா பதில் தெரிவிக்கும்படி உச்சநீதி மன்றம் கூறி உள்ளது.

ஊழல் தொடர்பாக சிபிஐ இயக்குனர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்திய நிலையில், இயக்குனர்கள் 2 பேரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மத்திய கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்தவும், விசாரணை அறிக்கை குறித்து, வர்மா மீதான மத்திய கண்காணிப்பு ஆணையம் நடத்தி விசாரணை அறிக்கை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி பட்நாய்க ஆய்வு மேற்கொண்டு இரண்டு வாரத்தில், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி மத்திய கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்தி உச்சநீதி மன்றத்தில் விசாரணை  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில், மத்திய கண்காணிப்பு  ஆணையம் விசாரணை அறிக்கையை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு கொடுக்கவும் உச்ச நீதி மனற்ம் உத்தரவிட்டது.

அப்போது கருத்து தெரிவித்த உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி,  சிபிஐயின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் அதன் புனிதத்துவம் குறித்து ஆராய்ந்து இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது அவசியம்  என்று தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் எந்தவித முடிவும் எடுக்க வில்லை என்ற நீதிபதிகள்,  சிவிசியின் அறிக்கை நகலை மனுதாரருக்கும் வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து திங்கட்கிழமை மதியம் 1 மணிக்குள் சீலிட்ட கவரில் அலோக் வர்மா பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், சிவிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை பார்க்கும்போது, அலோக் வர்மா  குற்றச் சாட்டுகள்  “பாராட்டுக்குரியவை அல்ல” அதுகுறித்து விசாரணை தேவை” என்றும் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கின் விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி  வைக்கப்பட்டது.

பிரபல தொழிலதிபர் மொயின் நிறுவனத்தில் கருப்பு பண விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி ஊழல் வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரத்தில் மொயினை விடுவிப்பது தொடர்பாக இடைத்தரகராக செயல்பட்ட குரோஷி என்பவரிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீது ராகேஷ் அஸ்தானாவும், அஸ்தானா மீது வர்மாவும் மாற்றி மாற்றி புகார் கூறினர். அதையடுத்து இருவரையும் மத்திய அரச கட்டாய விடுப்பில் அனுப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக  சிறப்பு இயக்குநர் அலோக் வர்மாமீது சிபிஐ தலைமையகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதற்கு எதிராகவும் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை கடந்த அக்டோபர் மாதம் 26ந்தேதி நடைபெற்றபோது மத்திய கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.