நடிகர் சுஷாந்த் வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்காது: சரத் பவார் அவநம்பிக்கை

புனே: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அதுதொடர்பான சந்தேக வழக்கை, சிபிஐ சரியாக விசாரிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.

பீகார் அரசின் சார்பில் சுஷாந்த் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென கோரப்பட்டதையடுத்து, அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால், தற்போது அந்த விவகாரம் சிபிஐ கைக்கு சென்றுள்ளது.

இந்நிலையில், அதுகுறித்து சரத்பவார் கூறியுள்ளதாவது, “சுஷாந்த் வழக்கை சிபிஐ சரியாக விசாரிக்காது என்றே நினைக்கிறேன். இதற்கு முன்பு கன்னட எழுத்தாளர் கல்புர்கி, முற்போக்கு சிந்தனையாளர்கள் நரேந்திர தபோல்கர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பன்சாரே, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் கொலை வழக்கு சிபிஐ அமைப்பிற்கு மாற்றப்பட்டது.

இவைகளின் மீதான விசாரணை என்னவானது? அதைப்போலத்தான் சுஷாந்த் தற்கொலை வழக்கையும் சிபிஐ சரியாக விசாரிக்காது. இருந்தாலும் உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து விசாரணைக்கு மராட்டிய அரசு ஒத்துழைக்கும்” என்றார் பவார்.