விஜய் மல்லையாவை கைது செய்ய தேவை இல்லை : சிபிஐ கடிதம் அம்பலம்
மும்பை
நாட்டை விட்டு செல்லும் முன்பு விஜய் மல்லையாவை கைது செய்ய தேவை இல்லை என சிபிஐ மும்பை காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.
வங்கிகளில் கடன் வாங்கி திருப்பித் தராமல் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அவரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர அரசு வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில் தாம் நாட்டை விட்டு செல்லும் முன்பு நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் தெரிவித்து விட்டு சென்றதாக விஜய் மல்லையா கூறினார். அத்துடன் சிபிஐ அவருக்கு நாட்டை விட்டு செல்ல தடை விதிக்க பிறப்பித்த லுக் அவுட் நோட்டிசும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
சிபிஐ அதற்கு மறுப்பு தெரிவித்தது. லுக் அவுட் நோட்டிஸ் வழங்கும் போதே அவர் நாட்டை விட்டு வெளியேறும் போது கைது செய்யலாம் என அறிவிக்கப்பட்டதாகவும் அதை மும்பை காவல்துறை தவறாக புரிந்துக் கொண்டு முடிவு எடுத்ததாகவும் சிபிஐ விளக்கம் அலித்தது. ஆனால் தற்போது ஆங்கில நாளேடான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வேறு விதமான தகவலை அளித்துள்ளது.
அந்த தகவல் விவரம் பின் வருமாறு :
”விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கும் முதல் லுக் அவுட் நோட்டிஸ் கடந்த 2015 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் அவர் இந்தியாவை விட்டு வெளியேற இந்த நோட்டிஸ் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன் பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி மற்றும் ஒரு லுக் அவுட் நோட்டிஸை சிபிஐ வெளியிட்டுள்ளது. அதில் அவர் இந்தியாவை விட்டு வெளியேறினாலும் இந்தியாவுக்கு மீண்டும் வந்தாலும் அது குறித்து தகவல் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது லுக் அவுட் நோட்டிசுடன் சிபிஐ மும்பை காவல்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் “சம்பந்தப்பட்டவரை தற்போது கைது செய்யும் நடவடிக்கை தேவை இல்லை. எதிர்காலத்தில் கைது நடவடிக்கை தேவைப்படும் போது அது குறித்து தனியாக தகவல் அனுப்பப்படும்” என குறிப்பிட்டுள்ளது..
ஆனால் சிபிஐ இந்த விவகாரத்தை தவறாக புரிந்துக் கொண்டுள்ளது. உண்மையில் லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டால் அவர் வெளிநாடு செல்லும் போது கைது செய்யபடவேண்டும் என்பதே விதி ஆகும். இதை சர்யாக புரிந்துக் கொள்ளாத சிபிஐ கைது நடவடிக்கை தேவை இல்லை என கடிதம் எழுதி உள்ளது.” என அந்த செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.