தேர்வின் போது 10,12ம் வகுப்பு மாணவர்கள் முகமூடி அணியலாம்: கொரோனா பீதியால் சிபிஎஸ்இ அனுமதி

டெல்லி: பொதுத்தேர்வின் போது முகமூடிகள், கை கழுவ பயன்படுத்தும் திரவங்களை எடுத்துச் செல்ல மாணவர்களுக்கு சிபிஎஸ்இ அனுமதி தந்திருக்கிறது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 26ம் தேதி தொடங்கின. இந்த தேர்வுகள் மார்ச் 18ம் தேதி நிறைவு பெறுகிறது. அதே போல் சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 22ம் தேதி தொடங்கின.

இந்த தேர்வுகள் மார்ச் 30ம் தேதியுடன் முடிகிறது. இதற்கு முன்பு கடந்த கல்வியாண்டின் போது, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச்சில் தொடங்கி ஏப்ரலில் முடிவடைந்தது. ஆனால் ஒரு மாதம் முன்னதாக தொடங்கி இருக்கிறது.

தேர்வுகள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் இருக்கிறது. இந் நிலையில் தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு சில வழிகாட்டுதல்களை சிபிஎஸ்இ வழங்கி இருக்கிறது.

அதன் படி மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதுவோர் வகுப்பறைகளில் முகமூடிகளை அணிந்து செல்லலாம். அதுதவிர கைகளை சுத்தமாக வைத்திருக்கும் வகையில், திரவ வடிவிலான சுத்திகரிப்பான்களை கொண்டு செல்லலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது.