மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க சிபிஎஸ்இ வாரியம் முடிவு!

cbse school 1bookடில்லி:
மாணவர்களின் புத்தக சுமைய குறைக்க மத்திய கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பள்ளி குழந்தைகள் இனி புத்தக மூட்டையை சுமப்பது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகள் பொதி சுமப்பதுபோல புத்தக பைகளை சுமந்து செல்வதை நாம் தினசரி காண்கிறோம். ஏன் நமது குழந்தைகள் கூட அந்த பொதியைதான் சுமந்து செல்கின்றன.
வளர்ந்து வரும் கல்வி  சூழலுக்கு ஏற்ப பாடங்களும் அதிகரிக்கப்படுவதால் குழந்தைகள் பாடபுத்தகங்கள் மூட்டையை சுமப்பது தவிர்க்க முடியாததாகிறது.
இத்தனை ஆண்டு காலமாக பிஞ்சுத் தோள்களில் வருத்தப்பட்டு பாரம் சுமந்த பள்ளிக்குழந்தைகளுக்கு இனி சற்று இளைப்பாறுதல் தர சிபிஎஸ்இ வாரியம் முடிவு செய்துள்ளது.  தனது உடலின் எடையைவிட அதிகமான புத்தக சுமையை சுமந்து செல்லும் சிறு பிள்ளைகளைப் பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டிருப்போம். இதனால் குழந்தைகள் முதுகு வலியிலும், கழுத்து வலியிலும் அவதிப்பட்டு, கூன் விழுந்த முதுகுடன் இருப்பதையும் கண்டிருப்போம்.
7 முதல் 13 வயது வரையிலான மாணவர்களின் புத்தகச் சுமை தொடர்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 88 சதவீத குழந்தைகள் அவர்களது உடல் எடையை விட 45 சதவீதம் அளவுக்கு கூடுதல் சுமையை புத்தகப் பையில் எடுத்து செல்வது தெரியவந்துள்ளது இதன் காரணமாக கூன் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக  அசோசேம் அமைப்பின் உடல்நலக்குழு தலைவர் பி.கே.ராவ் கூறி உள்ளார்.
இதே வருத்தமும் அக்கறையும் மகாராஷ்டிர மாநில அரசுக்கும் ஏற்பட்டதால் குழந்தைகளில் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே புத்தகச் சுமையாக இருக்க வேண்டும் என்ற ஆணையை பள்ளிகளுக்கு பிறப்பித்தது.
இந்த ஆணையை சிபிஎஸ்இ வாரியமும் வழி மொழிந்து இதற்கான சில வழிமுறைகளை பள்ளிகளுக்கும் பெற்றோருக்கும் வகுத்துத் தந்திருக்கிறது.
முதலாம், இரண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு வீட்டுபாடம் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். குழந்தைகள் தேவையற்ற புத்தகம் நோட்டுக்களை எடுத்துச் செல்லுகிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். வீட்டுப்பாடம் மற்றும் அசைன்மெண்டுகளை பள்ளியிலேயே முடித்துவிட்டு செல்வதற்கு ஆவண செய்ய வேண்டும் போன்ற அறிவுரைகளை சிபிஎஸ்இ வாரியம் தந்துள்ளது.
அரசின் ஆணை வந்த பிறகும் இதை மகாராஷ்டிராவில் வெகு சில பள்ளிகளே அமல்படுத்தியுள்ளன. உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு புத்தகச்சுமை என்று வரையறுப்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் சில பள்ளிகள் விமர்ச்சித்துள்ளன.
ஆனால், பள்ளி குழந்தைகளின் புத்தகப் பை தொடர்பான சட்டம் 2006ன்படி புத்தகப் பையின் சுமை மாணவர்களின் எடையை விட 10 சதவீதம் அளவுக்கு மேல் இருக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.