டெல்லி:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு காரணமாக கல்வி நிலையங்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில் நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைக்கப் படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்திலும் இன்னும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் திறக்கப்பட வில்லை. இதன் காரணமாக மாணவர்களின் பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப் பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலும்,  1 முதல் 10 – ம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடங்களிலும் 30 சதவீதம் குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆசிரி யர்கள் , பாடநூல் எழுத்தாளர்கள் மற்றும் மாவட்டகல்வி பயிற்சி நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய ஒருகுழு உருவாக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில், தேவையான பாடங்கள், தேவையற்ற பாடங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ-யும் பாடத்திட்டத்தை குறைக்க முன்வந்துள்ளது.
இதுகுறித்து கூறிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் , சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைக்கப்பட இருப்பதாகவும் முதல்கட்டமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.