புதுடெல்லி:

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-2021-ம் கல்வி ஆண்டில் இதுவரை பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. 10, 11, 12 என பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்-லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள் ஆன்-லைன் மூலம் தேர்வுகளை நடத்தியுள்ளது.

கடந்த முறை போன்று இந்த முறையும் தேர்வு எழுதாமல் மாணவ-மாணவிகள் தேர்ச்சி செய்யப்படுவார்களா? என்ற கேள்வியும் உள்ளது. மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அந்த அட்டவணை போலியானது என சிபிஎஸ்சி விளக்கம் அளித்திருந்தது.

பொதுவாக நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் ஜனவரி அல்லது பிப்ரவரியில் தேர்வுகள் நடத்தப்படும். இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர்ரமேஷ் பொக்ரியால், ஜனவரி மற்றும் பிப்ரவரியில் பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது. தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.