டில்லி

சி பி எஸ் இ தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும் மாணவர்களுக்குச் சராசரி அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

நாடெங்கும் கொரோனா தாக்குதல் அதிகரித்ததால் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன,    அவ்வகையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.  அந்த தேர்வுகளை வரும் ஜூலை மாதம் 1 முதல் 15ஆம் தேதி வரை நடத்த அட்டவணைகள் வெளியிடப்படன.  இந்த தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சி பி எஸ் இ பொதுத் தேர்வுகளில் மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யுமாறும் உள் மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் இந்த தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் வழங்கவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.    இதை பரிசீலனை செய்த சி பி எஸ் இ இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

அதில் வரும் ஜூலை 1 முதல் 15 வரை நடக்க இருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஏற்கனவே எழுதிய தேர்வுகளின் சராசரி அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது 3 பாடங்களுக்கு மேல் தேர்வு எழுதி இருந்தால் அவற்றின் சராசரி அடிப்படையில் அனைத்து தேர்வுகளுக்கும் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.

மூன்று பாடங்களுக்கு மட்டும் தேர்வு எழுதி இருந்தால் அவற்றில் சிறப்பாக மதிப்பெண் பெற்றுள்ள 2 பாடங்களின் சராசரியைக் கணக்கிட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது.   ஒன்று அல்லது 2 பாடங்களில் மட்டும் தேர்வு எழுதியோருக்கு உள் மதிப்பெண்கள் மற்றும் செய்முறைத் தேர்வின் சராசரி அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது.