டெல்லி: சிபிஎஸ்இ 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுகிறார்கள்.

9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் பருவமுறைத் தேர்வு, பயிற்சித் தேர்வு, செய்முறைத் தேர்வு போன்ற மற்ற தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி செய்யப்படுவார்கள். 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசியிருக்கும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், கொரோனா வைரஸ் மற்றும் அதனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்குமாறு பரிந்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகம், புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருந்த நிலையில், சிபிஎஸ்இ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.