டில்லி,

பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, மாநர பேருந்துகளில் சிசிடிவி காமிரா பொருத்த டில்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள், பலாத்காரம் போன்றவற்றில் இருந்து பெண்களை பாதுகாக்க நாடு முழுவதும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்து வருகிறது.

இந்நிலையில், டில்லி மாநில சட்டமன்ற தேர்தலின்போது, தலைநகர் டில்லியில்  பெண்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு வசதிகள் குறைவு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  பெண்களின் பாதுகாப்புக்காக மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று ஆம்ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து சட்டமன்றத்தில், காங்கிரஸ் மற்றும் பாரதியஜனதா கட்சியினர் கேள்விகளை எழுப்பினர். அதைத்தொடர்ந்து, மாநகர பேருந்துகளில் காமிரா பொருத்த ஆம்ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.

முதலில், சோதனை ஓட்டமாக 200 மாநகர பேருந்துகளில் காமிராக்களைப் பொருத்தி ஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து  டில்லி மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்படும் 3800 பேருந்துகளுக்கும் காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், டில்லி இன்டகிரேடட் மல்டி மாடல் சிஸ்டம் அமைப்பின் கீழ் 1200 கிளாஸ்டர் பேருந்துகள் இயக்கப்படுக்கின்றன. இந்த பேருந்துகளிலும், காமிராக்கள் பொருத்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக டில்லி மாநர போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.