டெல்லி: நாடு முழுவதும் உள்ள  அனைத்து  காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுமக்கள் மீதான போலீசாரின் வன்முறைகள்  அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையித்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தந்த மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும்அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  அதுபோல, மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமும், விருதாச்சலத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி செல்வமுருகன் திடீரென உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் சிசிடிவி காமிரா பொருத்தப்பட வேண்டும் என்றும், அதன் பதிவுகள் ஒரு வருடம் வரை பாதுகாக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

இதுபோன்ற காவல்துறையினரின் எல்லைமீறல், அதனால் விசாரணை கைதிகள் பாதிக்கப்படும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, காவல்துறையிரின் அடாவடி செயல்களை தடுக்கும் வகையிலும், மனித உரிமை மீறல்களை தடுப்பதற்காக  நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையைத் தொடர்ந்து,  அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். ஏற்கனவே பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்னர்.