3ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமிரா பொருத்த முடிவு… தமிழக அரசு

சென்னை:
டாஸ்மாக் கடைகளில் நடைபெற்று வரும் திருட்டுக்களை கண்காணிக்க தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் காமிரா பொருத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக , மண்டல வாரியாக எந்த கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தலாம் என அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அந்த அறிக்கையின் படி தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் காமிராக்களை பொருத்த முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் (டாஸ்மாக்) மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோ‌‌ஷ்குமார், அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு  சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில்மாவட்ட மேலாளர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்காக கடைகளை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி,    மாவட்ட மேலாளர்கள், ஏற்கனவே திருட்டு நடந்துள்ள கடைகள் மற்றும் அதிக வசூலை தரும் டாஸ்மாக் கடைகள், சட்டம் ஒழுங்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதியில் இருக்கும் கடைகளில் கண்காணிப்பு கேமிராக்களை பொறுத்த திட்டமிட்டு பட்டியலை தயாரித்துள்ளனர்.
அதையடுத்து,  அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது
அதன்படி,  சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 535 கண்காணிப்பு கேமராக்களும், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 450 கண்காணிப்பு கேமராக்களும், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்தில் 755 கண்காணிப்பு கேமராக்களும், சேலம், தர்மபுரி, நாமக்கல், வேலூர், கிரு‌‌ஷ்ணகிரி, திருவண்ணாமலை, அரக்கோணம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தில் 565 கண்காணிப்பு கேமராக்களும், திருச்சி, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், கரூர், திருவாரூர், விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டலத்தில் 695 கடைகளும் என 3 ஆயிரம் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.