முதலில் ஒரு விசயம். இது, ஈழப்போராளி கிட்டு பற்றிய படமல்ல. தமிழகத்தில் நிலவும் சாதித்தீண்டாமையை, உக்கிரத்துடன் சொல்லும் திரைப்படம்.
சரி சமமாய் வாழத் துடிக்கும் தலித் மக்களின் போராட்டமும், அதைத்தடுக்கும் ஆதிக்க சாதி சூழ்ச்சியும்தான் படத்தின் அடிநாதம்.
0
1987 ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கிறது கதை.  தாழ்ந்த சாதி(!) பிணத்தை பொதுவழியில்  கொண்டு செல்லக்கூடாது என தடுக்கிறது ஆதிக்க சாதி.
என்றெனும் ஒருநாள் அந்தப் பொதுவழியில் நிமிர்ந்து நடப்பதுதான் தங்கள் லட்சியம் என போராடுகிறது தாழ்த்தப்பட்ட சாதி.
பனிரெண்டாம் வகுப்பில் தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, முதல்தலைமுறை பட்டதாரியாக கல்லூரிக்குச் செல்கிறார் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த விஷ்ணு விஷால். ஊரிலிருக்கும் பொது நலவாதி, பார்த்திபன்தானஅ விஷ்ணுவை படிக்க வைக்கிறார்.  “இந்த மக்களின் நிலை மாற வேண்டும் என்றால், நீ படித்து மாவட்ட ஆட்சியராக வேண்டும்”என்று விஷ்ணுவிடம் சொல்கிறார்.
இந்த வார்த்தைகளை  மனதில் இருத்தி வாழ்கிறார் விஷ்ணு. இதற்கிடையே ஆதிக்கசாதியினர்,  விஷ்ணுவையும்  அவரது  மக்களையும் முடக்க சதி செய்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களின் சோகங்களை, அவலங்களை முதல் முறையாக முகத்திலறைந்தாற்போல் சொல்கின்றன படத்தின் காட்சிகள்.
அதோடு ஆணவப்படுகொலை பற்றியும் அப்பட்டமாய் சொல்கிறது.   பெற்ற மகளையும் கழுத்தை அறுத்து கொல்கிற அந்த காட்சி.. உறைய வைக்கும் யதார்த்தம்.
இத்தனை தைரியமாக படமெடுத்த இயக்குநர் சுசீந்திரனை பாராட்டலாம்.
கிருஷ்ணகுமார் என்கிற கிட்டுவாக வருகிறார் விஷ்ணுவிஷால் நடிப்பிலும் உடல்மொழியிலும் நல்ல முன்னேற்றம்.  வாழ்த்துகள் விஷ்ணு.
சின்னராசுவாக கருப்புச்சட்டையில் வலம் வருகிறார். அற்புதமான பாத்திரம். உணர்ந்து நடித்திருக்கிறார். தனது வழக்கமான கேலி கிண்டல்களை விடுத்து! அவருக்கும் பாராட்டுக்கள்.
இதர கதாபாத்திரங்களும், பொருத்தமான தேர்வு. சிறப்பான நடிப்பு. சில நிமிடங்களே வந்தாலும் பதறவைக்கிறார் அந்த வில்லன் நாகிநீடு. ( “சோத்துக்கு இல்லாதவனெல்லாம் சோசியலிஸம் பேசுறானுங்க”)   காவல்துரை  அதிகாரியாக வரும்  ஹரிஸ் உத்தமனும், மிரட்டுகிறார்.
இமான்  இசையில்  ‘இளந்தாரி பொண்ணு’ பாடல் ரசிக்கவைக்கிறது.
80களின் காலகட்டத்தை அப்படியே கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்  ஏ.ஆர்.சூர்யா.
“லாஜிக்” என்று பார்த்தால் சில இடங்களில் இடிக்கிறது. ஆனால் இப்படி ஒரு படம் வருவதே லாஜிக் மீறல்தான். ஏனென்றால், “கபாலி” படத்தைத்தான் “தலித் படம்” என்று கொண்டாடும் தமிழகத்தில், இப்படியோர் இயல்பான தலித்தயல் படமே லாஜிக் மீறல்தான்.
இயக்குநர் சுசீந்திரனுக்கு வாழ்த்துகள்!