ஜெய்ஸ்ரீராம் கோஷக் கொலைகளை தடுக்கக்கோரி பிரதமருக்கு கடிதமெழுதிய பிரபலங்கள்

மும்பை: ஜெய்ஸ்ரீராம் கோஷம் நாட்டில் அதிகரித்து, அதன்மூலம் அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருவதையொட்டி, 49 பிரபலங்கள், அத்தகைய சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஜெய்ஸ்ரீராம் கோஷம் ஒரு போருக்கான கோஷமாய் மாறியுள்ளதாகவும் அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பிரபலங்களுள், சினிமாத் துறையைச் சேர்ந்த ஷ்யாம் பெனெகல், அபர்னா சென், பாடகர் சுபா மட்கல், வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா, வங்காள சினிமா கலைஞர் செளமித்ரோ சட்டரஜி, தமிழ் திரைப்பட நடிகை ரேவதி, சமூக செயல்பாட்டாளர் பினாயக் சென் மற்றும் சமூகவியல் அறிஞர் ஆஷிஸ் நந்தி ஆகியோர் அடக்கம்.

“நாங்கள் அமைதியை விரும்பும், அதேசமயம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்பவர்கள். நமது அன்புக்குரிய நாட்டில் சமீபகாலங்களில் அதிகரித்துவரும் அடித்துக்கொலை செய்யும் சம்பவங்களால் நாங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.