மதுரை:

துரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்  செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் செல்போன் கொண்டு செல்ல உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்  கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து கோவிலுக்கு செல்வோருககு பல்வேறு கட்டுப்பாடுகளை மதுரை உயர்நீதி மன்றம் விதித்திருந்தது. அதன்படி கோவிலுக்குள் செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மாதம் இறுதியில்,  மதுரையில் சித்திரை விழா நடைபெற இருப்பதையொட்டி,   மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செய்தியாளர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கோரி தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதையடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்  செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி வழங்கியது. மேலும், ஒரு தொலைக்காட்சிக்கு 2 பேர்  மட்டுமே கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம் எனவும் கட்டுபாடு விதித்துள்ளது.