மெரினா புரட்சி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை துறை தடை

“மெரினா புரட்சி” திரைப்படத்துக்கு திரைப்பட தணிக்கைத் துறை தடைவிதித்துள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது மெரினா புரட்சி திரைப்படம். நாட்சியாள் பிலிம்ஸ் சார்பில் எம்.எஸ்.ராஜ், தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் இது.

இத்திரைப்படம் குறித்து, “மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியை பேசும் வகையில் புலனாய்வு பார்வையில் இப்படம் உருவாகியிருக்கிறுது. இப்படம் வெளியானதும், ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு காரணமாக இருந்த சில தமிழர்களின் முகமூடி கிழியும்.

2017 ஜனவரி 8ம் தேதி சென்னை மெரினாவில் 18 பேர் கூடி இந்த போராட்டத்தை தொடங்கினர். அந்த 18 பேர் தான் இந்த போராட்டம் உருவாகக் காரணம். அவர்கள் அனைவரும் இந்த படத்தில் வருகின்றனர்.

நாட்டு மாடுகளை அழிப்பது மட்டுமே பீட்டாவின் நோக்கம் அல்ல. அவர்களின் அசைன்மெண்ட் மிகப்பெரியது. இந்த படம் எடுப்பதற்கு முன்னர் எட்டு மாதங்கள் தீவிரமாக ஆய்வு செய்தேன் அதில் நிறைய உண்மைகள் தெரியவந்தன.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடைவர காரணமாக இருந்ததே மூன்று தமிழர்கள் தான். அதில் ஒரு நடிகையும் அடங்குவார்.

இப்படி நிறைய உண்மைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். இதனால் என்ன பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன்.ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தங்களை முன்னிலைப்படுத்தி கொண்டவர்கள், போராட்டத்தின் இறுதி நாட்களில் எப்படி மாறினார்கள், கடைசி நாளில் வன்முறை எப்படி வெடித்தது, போராட்டத்தை ஆட்சியாளர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை எல்லாம் தைரியமாக சொல்லியிருக்கிறேன்”, என்று ஏற்கெனவே படத்தின் இயக்குநர் எம்.எஸ்.ராஜ்  தெரிவித்திருந்தார்.

இயக்குநர் எம்..எஸ். ராஜ்

ஆகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து.

இந்த நிலையில் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து, தணிக்கைச் சான்று பெற அனுப்பப்பட்டது. ஆனால், இத்திரைப்படத்துக்கு  தணிக்கை சான்று அளிக்க மறுத்து  மத்திய தணிக்கை துறை தடை விதித்திருக்கிறது.

இயக்குநர் எம்.எஸ்.ராஜ் இது குறித்து, “மெரினா புரட்சி படத்தை மறு சீராய்வு குழுவுக்கு அனுப்புவோம்  நிச்சயம் அங்கு எங்களுக்கு நீதி கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.