2
திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் லட்டு பிரசாதத்தில் பூரான் இருப்பதாக, `வாட்ஸ் அப்’பில் பரவும் படத்தால் பக்தர்களிடையே அதிர்ச்சி  ஏற்பட்டுள்ளது.
திருப்பதி வெங்கடாஜலபதி  கோயிலில் சாதாரண நாட்களில் அறுபது ஆயிரம் பக்தர்களும், விடுமுறை நாட்களில் எண்பது ஆயிரம் பக்தர்கள் வரையிலும் தரிசனம் செய்கினறார்கள்.  அப்படி  வரும் பக்தர்களுக்கு இலவசமாகவும், விலைக்கும் லட்டு பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
இதற்காக தினமும் ஒரு லட்சம் லட்டுகள் வரை தயார்  செய்கிறது திருப்பதி தேவஸ்தானம்.  இந்த நிலையில், ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பார்வதிபுரத்தில் உள்ள ராமபுரம் காலனியை சேர்ந்த தேவிபிரசாத், திரிநாத் ஆகிய பக்தர்கள்  திருமலையில் சுவாமி தரிசனம் செய்து, லட்டு பிரசாதம் பெற்றனர்.
அவர்கள் ஊர் திரும்பிய பிறகு  லட்டை சாப்பிட எடுத்தபோது, அதில் பூரான் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். . இதை புகைப்படமாக எடுத்தனர். இந்த படம் தற்போது சமூக வலைதளமான, ‘வாட்ஸ் அப்’பில் பரவி வருகிறது.
இதுகுறித்து, தேவஸ்தான லட்டு தயாரிப்பு பிரிவு உதவி செயல் அலுவலர் அசோக் பாபு பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர், “  அந்த படத்தை பார்க்கும்போது அது லட்டு மீது பூரானை வைத்து எடுக்கப்பட்ட  படம் போன்று உள்ளது.  ஏனென்றால், லட்டு தயார் செய்யும் போது பூரான் இருந்திருந்தால் பூரான் அப்படியே முழுமையாக இருக்க வாய்ப்பு கிடையாது. மிகவும் பாதுகாப்புடன் இங்கு லட்டு தயார் செய்யப்படுகிறது. எனவே இதுபோன்ற சம்பவம் நடைபெற வாய்ப்பே கிடையாது.  திருப்பதி தேவஸ்தானத்திற்கு கெட்ட பெயரை  உருவாக்க இது போல யாரோ சிலர் செய்திருக்கின்றனர்.  அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
ஏற்கனவே இதுபோன்று திருப்பதி லட்டு பிரசாதத்தில் இரும்பு துண்டு,  சிறு கம்பி,  குட்கா பாக்கெட் போன்றவை இருந்ததாக இணையத்தில் படங்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.