புதிய வேளாண் சட்டங்களை மத்திய பாஜ அரசு திரும்பப் பெற வேண்டும் – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை:

புதிய வேளாண் சட்டங்களை மத்திய பாஜ அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய பாஜ அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 4 நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி, அரியானா மாநில எல்லைக்கு அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கிற வகையில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாக விவசாயிகள் கருதுகிறார்கள். இதுவரை விவசாயிகள் பெற்று வந்த குறைந்தபட்ச ஆதரவு விலை புதிய வேளாண் சட்டத்தால் பறிக்கப்பட்டுள்ளது. தங்கள் விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்கிற உரிமையை இழந்துள்ளனர்.

விவசாயிகளின் சந்தையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய பாஜ அரசு திரும்பப் பெற வேண்டும். பேச்சுவார்த்தை என்ற பெயரில் போராட்டத்தைப் பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச வேண்டும். அதன்பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதற்கான அடித்தளமாகப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.