மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்! தமிழகத்திற்கு மேலும் ஒரு அமைச்சர்?

டில்லி,

த்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக டில்லி அரசு வட்டார தகவல்கள் உறுதி செய்கின்றன.

தமிழகத்திற்கு மேலும் ஒரு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்றும் டில்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

புதிய அமைச்சரவையில் பாரதியஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், பாரதியஜனதா காலூன்ற ஏதுவாக கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு துணைஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவ தால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஏற்கனவே மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக பதவி ஏற்றதால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதுபோல் மறைந்த சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே ஆகியோர்களின் துறைகள் மற்ற அமைச்சர்களிடம் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு பின்னர் மத்திய அமைச்சரவை யில் மாற்றம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள  வெங்கையாவின்  தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையை ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று ஊரக வளர்ச்சித் துறை நரேந்திர சிங் தோமருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கோவா மாநிலத்தில் முதல்வராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்ற போது, அவரிடம் இருந்த பாதுகாப்புத் துறை, நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த அனில் மாதவ் தவே மே மாதம் காலமானதையடுத்து, அந்தத் துறையையும் அருண் ஜேட்லியே கவனித்து வருகிறார்.

இந்நிலையில், விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று டில்லி அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் பதவியை பிடிக்க பாரதியஜனதா தலைவர் அமித்ஷாவை பலர் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

புதிய அமைச்சரவை பட்டியலில், தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களின் பா.ஜ. நிர்வாகிகளுக்கு அமைச்சரவை பதவி கிடைக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

தற்போது தமிழகத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் மத்திய அமைச்சராக  இருக்கிறார். தமிழகத்தில் மேலும் பா.க கட்சியை வலுப்படுத்த, மேலும் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று டில்லி பாஜக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும், புதிய அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.