ஜூலை 31ந்தேதி மத்தியக் கூட்டுறவு வங்கிகள் முற்றுகை போராட்டம்! பி.ஆர்.பாண்டியன்

திருச்சி:

ஜூலை 31ந்தேதி டெல்டா மாவட்டத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்  கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இது ஏழை மற்றும் விவசாய மக்களிடையே கடுமையான அதிர்வலைகளை உருவாக்கியது.

இதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இது தொடர்பாக  தமிழகக் காவிரி விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து   விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் செயலற்று முடங்கியுள்ளன. வேளாண் கடன் கிடைக்காத விவசாயிகள் மனமுடைந்து, செய்வதறியாது உள்ளனர்.

எனவே, நிபந்தனையின்றி சாகுபடிப் பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் பழைய முறையைப் பின்பற்றி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும்.

”வேளாண் கூட்டுறவு வங்கிகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசைக் கண்டித் தும் தமிழக அரசு உடனடியாகப் பழைய நடைமுறையைப் பின்பற்றி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க உரிய அரசாணை பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் ஜூலை 31-ம் தேதி, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடியைத் தொடர முடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர். சம்பா சாகுபடியைத் தொடங்க முடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தமிழகத்திற்கான தண்ணீரைப் பெற்றுத்தர முதல்வர் அவசரகால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

குறுவைத் தொகுப்புத் திட்டம் வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். குறுவை காப்பீடு செய்வதற்கு அனைத்துக் கிராமங்களுக்கும் நிபந்தனையின்றி அனுமதி பெற்றுத்தர வேண்டும்”.

விவசாயிகள் நிலங்களைப் பாழாக்குகிறார்கள், இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி நிலத்தடி நீரைப் பாழடிக்கிறார்கள், மாற்றுத் தொழில்களை விவசாயிகள் என்ற போர்வையில் எதிர்க்கிறார் கள் என்று விவசாயிகளைக் கொச்சைப்படுத்தி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் மாரிதாஸ் என்ற நபர் வலைதளங்களில் விமர்சித்து வருவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாயிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.