சென்னை:

மிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமியை இன்று மத்திய குழுவினர் சந்தித்து பேசினார்கள். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

தமிழகத்தில்  சென்னை உள்பட சில பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,  கொரோனா தடுப்பு பணிகள், சிகிச்சை மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் நேரில் ஆராய மத்திய குழுவினர் கடந்த 24ந்தேதி இரவு  சென்னை வந்தனர்.

அவர்கள், 25ந்தேதி அன்று தமிழக  தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்கள்.  பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையாளர் உள்பட உயர்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து,  தேசிய பேரிடர் மேலாண்மை கூடுதல் செயலாளர் வி.திருப்புகழ் தலைமையில் வந்திருந்த குழுவினர் 2 பிரிவுகளாக சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். ஊரடங்கு எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது, மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்கள், மருத்துவமனைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன   என்பதை பற்றியும் நேரில் ஆய்வு நடத்தினார்கள்.

சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாடு மையம், தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் சிகிச்சை மருத்துவமனை, கோயம்பேடு மார்க்கெட் உள்பட பல பகுதிகளுக்கு நேரில்  சென்று பார்வையிட்டார்கள்.

மேலும்,  அம்மா உணவகத்துக்கு சென்று  சாப்பிட்டவர்களிடமும்,  உணவு வழங்கும் பணியாளர்களிடமும் விபரங்களை கேட்டனர். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 532 அறைகள் கொண்ட பகுதி, வசதிகளையும் நேரில் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி யுடன் ஆலோசனை நடத்தினார்கள்.  இந்த ஆலோசனையின்போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.