சென்னை

மிழகத்தில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய நாளை மத்தியக் குழு வருகிறது.

தமிழகத்தில் நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாகப் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.   இதனால் மாநிலம் எங்கும் கடும் வெள்ளம் ஏற்பட்டு பல இடங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.   இந்த சேதங்களுக்காகத் தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளது.   இதையொட்டி தமிழக வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை வருகிறது.

மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் நாளை வரும் இரு குழுக்கள் மாலை 3 மணிக்கு முதல்வர் மற்றும் தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்துகின்றனர்.   பிறகு 6 ஆம் தேதி அன்று ஒரு குழுவினர் தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு செய்து விட்டு மாலை புதுச்சேரிக்குச் செல்கின்றனர்.  பிறகு  7ஆம் தேதி புதுச்சேரியில் ஆய்வை முடித்து விட்டு, மீண்டும் தமிழகம் வரும் மத்திய குழுவினர் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை ஆய்வு செய்துவிட்டு இரவு சென்னை திரும்புகின்றனர்.

இரண்டாவது குழுவினர், வரும் 6ஆம் தேதி வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் ஆய்வு செய்துவிட்டு மாலை வேலூர் செல்கின்றனர்.  பிறகு 7ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு, மாலையில் 2 வது குழுவினரும் சென்னை திரும்புகின்றனர். அதற்குப் பிறகு 8ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்துகின்றனர்.