சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வு நடத்த வந்துள்ள மத்திய குழுவினர், இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன்  காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 20ஆயிரத்தை தாண்டி யுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 72 ஆயிரத்தை கடந்துள்ளது.  கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய  மத்திய அரசின் 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மூன்று நாள் பயணமாக நேற்று  தமிழகம் வந்தடைந்தனர்.
இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சுகாதாரத் துறை உயரதிகாரி களுடன்  நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, சென்னை  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தனர். அதையடுத்து,  புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் நேரடியாக ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிப்பு உள்ள  10 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம்  ஆலோசனை நடத்த உள்ளனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற உள்ளது.
நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.