எஸ்.வி.சேகர் மீது மத்திய சைபர் கிரைம் போலீசார் வழக்கு

சென்னை:

நடிகர் எஸ்.வி.சேகர் மீது மத்திய சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை பதிவு செய்தார்.
இதற்கு பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து, அப்பதிவை எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்திலிருந்து அகற்றினார். மன்னிப்பும் கோரினார்.

இதை பத்திரிகையாளர்கள் ஏற்கவில்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர், பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம், திரைப்பட பத்திரிகையாளர் சங்கம், பால்முகவோர் சங்கம் உள்ளிட்ட பலரும் புகார் அளித்தனர்.

இதையடுத்து எஸ்.வி.சேகர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல், குறிப்பிட்ட சமூகத்திற்கு, தனி மனிதருக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டிவிடுதல், வலைதளங்களில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பதிவிடுதல், பெண் வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் மத்திய சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.