ரிசர்வ் வங்கி சர்ச்சை குறித்து மத்திய நிதி அமைச்சகம்  விளக்கம்

--

த்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் “ரிசர்வ் வங்கி சுயாட்சி அதிகாரத்துடன் செயல்படுவது அவசியம்.   அந்த அமைப்புக்கு மதிப்பளித்து அரசு பேணிக் காத்து வருகிறது” என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது.

தன்னாட்சி அமைப்பான ரிசர்வ் வங்கியை மத்திய அரசு ஆட்டிப்படைக்க நினைப்பதாக விமர்சனம் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, “ரிசர்வ் வங்கியின்தன்னாட்சி அதிகாரம் பராமரிக்கப்பட வேண்டும் இதை செய்ய தவறினால் மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படும்” என்று எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் “வங்கிகள் அளித்த கடன்களின் மீது ரிசர்வ் வங்கி உரிய கண்காணிப்பு மேற்கொள்ளாததால் அக்கடன்கள் வராக்கடன்களாக மாறின” என்று  நிதியமைச்சர் ஜெட்லி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

அதேநேரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மத்திய அரசு நேரடியாக உத்தரவிட உதவும் சட்டப்பிரிவு 7ஐ அமலுக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

இந்த மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ள அறிக்கையில், “ரிசர்வ் வங்கியின் அதிகாரம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசு நடைமுறையாகும். பல்வேறு முக்கிய அம்சங்களில் ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்த பின்பே முடிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. பொது மக்களின் நலம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கருதியே அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான மோதல் போக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.