சுற்றுச்சூழல் திட்ட அனுமதி வழங்குவது தொடர்பாக குழுக்கள் அமைப்பு! மத்திய அரசு நடவடிக்கை
டில்லி:
சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக 2 குழுக்களை மத்திய அரசு அமைத்து உள்ளது.
அனுமதி வழங்குவது தொடர்பாக 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவும், ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் 12 பேர் கொண்ட மற்றொரு குழுவையும் அமைத்து மத்திய சுற்றுச் சூழல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் புதுப்புதுத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதும், அதை நடைமுறைப்படுத்தும் போது, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் மற்றும் வழக்குகள் காரணமாக தடை படுவதும் வாடிக்கையாகி வருகிறது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஓஎன்ஜிசி மற்றும் நியூட்ரினோ போன்ற திட்டங்கள் சுற்றுச்சூழலை காரணம் காட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் முடங்கி உள்ளது.
இந்த நிலையில், நியூட்ரினோ போன்ற சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான 3 பேர் கொண்ட குழுவை மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அமைத்துள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் பி பிரிவின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் மாநில அளவிலான மதிப்பீட்டு குழுவையும் நியமித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
3 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவுக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி வி.கே.சண்முகம் தலைமை வகிப்பார் என்றும், இந்த உயர்மட்டக் குழுவின் கீழ் சுற்றுச்சூழல் ஆய்வுகளை மேற்கொள்ள 12 பேர் கொண்ட மற்றொரு குழுவையையும் மத்திய அரசு அமைத்துள்ளது.