தமிழகத்துக்கு ரூ.1,928 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்க ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த வாரம் பிரதமர் மோடி அறிவித்தார்.

இது குறித்து பின்னர் தொடர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்சார்பு இந்தியா என்ற தலைப்பிலான இந்த தொலைநோக்கு திட்டம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் தொகை, அமைப்பு முறை, தேவை ஆகிய 5 தூண்களை அடிப்படையாக கொண்டது என்றார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

அதன்படி மாநிலங்களுக்கான மே மாத பங்குத் தொகையாக 46 ஆயிரத்து 38 கோடி ரூபாய் நிதி பகிர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு 1,928 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 8,255 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.