டில்லி:

ரூ.50 கோடிக்கு மேல் உள்ள அனைத்து செயல்படாத சொத்துக்களிலும் மோசடி செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்யுமாறு பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் 2வது பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து அனைத்து பொதுத் துறை வங்கிளின் தலைமைக்கு ஒரு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘‘ரூ. 50 கோடிக்கு மேல் உள்ள செயல்படாத சொத்துக்களில் மோசடி எதுவும் நடந்துள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கடனை திருப்பி செலுத்தக் கூடிய திறன் கொண்ட கடனாளிகள் யாரும் இதில் உள்ளனரா? என்பதை அடையாளப்படுத்த வேண்டும்.

அதோடு அனைத்து மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். இது குறித்த தகவல்களை அமலாக்க துறை, வருவாய் நுண்ணறிவு இயக்குனரகம் ஆகியவற்றுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், செயல்பாடு மற்றும் தொழில்நுட்பத்தில் உள்ள அச்சுறுத்தல்களை 15 நாட்களுக்குள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் அருண்ஜெட்லி பேசுகையில்,‘‘ இந்திய தொழிலதிபர்கள் சிலரிடம் நெறிமுறை பற்றாகுறை உள்ளது. ஆடிட்டர்கள் மற்றும் ஒழுங்கு முறையாளர்களிடம் போதுமான மேற்பார்வை இல்லை’’ என்றார். அப்போது பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு குறித்து அவர் வெளிப்படையாக பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.