டில்லி,

பாச இணைய தளங்களை முடக்க இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கெடு விதித்து உள்ளது.

ஆபாச இணைய தளங்கள் குறித்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு உச்சநீதி மன்றத்திலும் விசாரணை செய்யப்பட்டு மத்திய அரசுக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.

அதைத்தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த அறிவுறுத்தலின் படி, மத்திய அரசு பல்வேறு அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்கியது.

அந்த குழுவினர்  குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோ அடங்கிய இணையதளங்களை முடக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து மத்திய அரசு ஆபாச இணைய தளங்களை முடக்க  உத்தரவிட்டது. பின்னர் திடீரென 857 ஆபாச இணையதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. அப்போது,  குழந்தைகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாச பட வலைதளங்களுக்கு மட்டும் தடை நீடிப்பதாக அறிவித்தது.

இது மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது குழந்தைகளை கொண்ட ஆபாச இணைய தளங்களை ஜூலை 31க்குள் முடக்க வேண்டும் என இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக  வெளிநாட்டில் இருந்து இயங்கும் தளங்கள் உட்பட சுமார் ஆயிரத்து 500 இணைய தளங்களை முடக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கூறியுள்ளது.