விமான நிலையங்களின் தலைவர்கள் பெயரை நீக்க மத்திய அரசு திட்டம்

டெல்லி:

நாடு முழுவதும் விமானநிலையங்களுக்கு சூட்டப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, அந்தந்த நகரங்களின் பெயரை சூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் உள்ள சர்வதேச விமானநிலையம் இந்திராகாந்தி விமானநிலையம் என்றும், கோல்கத்தாவில் சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம் என்றும், ஐதரபாத்தில் ராஜீவ்காந்தி விமானநிலையம் என்றும், பெங்களூருவில் கெம்பேகவுடா விமானநிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இத்தகைய விமானநிலையங்களின் பெயர்கள் இந்திய தலைவர்களின் பெயர்களில் இருப்பதால் வெளிநாட்டு பயணிகள் வந்து இறங்குவதற்கு சிரமமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த வார்த்தைகளை அவர்கள் உச்சரிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் சிரமப்படுகின்றனர்.

அதனால் இந்த விமானநிலையங்களின் பெயர்களை அவை அமைந்திருக்கும் நகரத்தின் பெயர்களை சூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

‘இந்த திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை’’ என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

மேலும், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமானநிலையதில் ‘மகராஜ்’ என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என்று சிவசேனா கோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து தான் நாட்டில் உள்ள அனைத்து விமானநிலையங்களுக்கும் அந்தந்த நகரின் பெயரை சூட்ட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

You may have missed