டெல்லி: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக, வெளிநாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யப் போவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்து இருக்கிறார்.

சமையலின் முக்கிய அம்சமாக திகழும் வெங்காயம் உச்சக்கட்ட விலையை எட்டி இருக்கிறது. வெங்காய விலை, இல்லத்தரசிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் மழையே கடுமையான விலை ஏற்றத்துக்கு காரணம் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைளில் மத்திய அரசு இறங்கியது.

அதன் ஒரு கட்டமாக, வெளிநாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. வெங்காய விலை உயர்வு குறித்து டெல்லியில் உணவுத்துறை செயலாளர்கள் கூட்டம் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வது என முடிவு மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் டன் வெங்காயம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட இருக்கிறது.

இந்த தகவலை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான். அவர் அதில் கூறியிருப்பதாவது: விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, 1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வெங்காயம் வரும் 15ம் தேதி முதல் டிசம்பர் 15 வரை நாடு முழுவதும் வினியோகம் செய்யப்படும் என்றார்.