கஜா புயல் நிவாரணம் தர மத்தியஅரசு மறுக்கிறது: உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு புகார்

சென்னை:

த்திய அரசிடம் போதிய நிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத்துக்கு, நிதி தர மறுத்து வருகிறது என்று மத்திய அரசு மீது தமிழக அரசு புகார் தெரிவித்து உள்ளது.

புயல் நிவாரணம் தொடர்பான வழக்கில், இன்று தமிழக அரசின் வழக்கறிஞர் வாதத்தின்போது,  மத்திய அரசிடம், மாநில பேரிடர் நிவாரண நிதியில் போது மான நிதி இருந்தும், தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு தரவில்லை என கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயர்நீதி மன்றம் மதுரை கிளையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ஸ்டாலின் உள்பட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற  விசாரணையின் போது, கஜா புயல் பாதிப்பை பார்வையிட்டுச் சென்ற  மத்திய குழுவினர், எப்போது இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு கேட்டிருந்த அனைத்து ஆவனங்களும் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டதாக தமிழகஅரசு தெரிவித்திருந்தது. அதையடுத்து , கஜா புயல் நிவாரணம் குறித்து, மத்தியஅரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து 19ந்தேதி (இன்று) பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு வழக்கறிஞர் வாதாடியபோது, மத்தியக் குழு அளிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழகத்திற்கு நிதி வழங்க முடியும் என்றும், இறுதி அறிக்கை தயாரிக்கவே தமிழக அரசிடம் சந்தேகங்கள் கேட்கப்பட்டதாக வும் அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர், மத்திய அரசிடம், மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும் மத்திய அரசு தமிழகத்திற்கு தர மறுத்து வருகிறது  என குற்றம் சாட்டினார்.

இதையடுத்து கஜா புயல் குறித்து மத்திய அரசு  எப்போது இறுதி அறிக்கை அளிக்கும் என்பது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.