ஜிஎஸ்டி.யில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு….மத்திய அரசு

டில்லி:

நாட்டில் நடைமுறையில் இருந்த பல வரி விதிப்பு முறைகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு ஆண்டை கடந்து விட்ட நிலையிலும் இதன் மீதான குறைபாடுகள் இன்னும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படாத நிலை உள்ளது.

அவ்வப்போது கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் சில திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி.யில் இருந்து சில பொருட்களுக்கு விலக்கு அளிக்கும் முடிவுகளை இந்த குழு எடுத்து அறிவித்து வருகிறது.

இந்த வகையில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்ப்டடு வந்தது. பெண்களில் உடல் நலனை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் சானிட்டரி நாப்கின்கள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சானிட்டரி நாப்கின்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதற்காக பெண்கள் அமைப்புகள், மாணவ மாணவிகள், சமூக நல ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் குரல் கொடுத்தனர்.

11 மாத கால போராட்டத்துக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி.யில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு அளித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக போராட்டம் நடத்திய அனைவருக்கும் பெண்கள் அமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.