முல்லைபெரியாரில் கேரளா புதிய அணை: மோடிக்கு எடப்பாடி காரசார கடிதம்

சென்னை:

முல்லை பெரியாறு அணைக்கு பதில் வேறு அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை நிபந்தனைகளுடன் ஆய்வு செய்ய அனுமதி அளித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், அணை கட்ட ஆய்வுக்கு அனுமதி அளித்த வழங்கியதை வாபஸ் பெறுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு காரசாரமாக கடிதம் எழுதி உள்ளார்.

முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு பல ஆண்டுகளாக கண்ணாமூச்சி விளையாடி வருகிறது. இதன் காரணமாக ஜெ.முதல்வராக இருந்தபோது, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில்,  முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் முல்லை பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது என்று ஐந்து நீதிபதிகள் அமர்வு கண்டிப்பாக உத்தரவிட்டது.

ஆனால், இந்த விஷயத்தில் கேரள அரசு முரண்டு பிடித்து வருகிறது. புதிய அணை கட்டியே தீருவோம் என்றும் கூறி வருகிறது. இதுதொடர்பாக  திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது. மத்திய சுற்றுச்சூழல் துறையும், நிபந்தனைகளுடன் அணை கட்ட ஆய்வு செய்யுமாறு அனுமதி வழங்கி உள்ளது.

இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கேரளாவுக்கு புதிய அணை கட்டுவதற்கான  ஆய்வை தடுத்து நிறுத்த கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்  எழுதி உள்ளார்.

அதில்,  தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய சுற்று சூழல் அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என  உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும், மத்திய அரசை கேரளா அணுகியது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என  கடிதத்தில் தெரிவித்துள்ள முதல்வர்,  சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் முடிவு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும் என்றும்,  மத்திய சுற்றுச் சூழல் அமைச்சக அனுமதியை உடனே  வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தும்படியும்  பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.