ஏழைகளுக்கு மாதந்தோறும் வீட்டு வாடகை! மத்திய அரசு திட்டம்

டில்லி,

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்வு செய்துள்ளது மத்திய அரசு. அந்த நகரங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு வீட்டு வாடகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்தியஅரசு புதிய வீட்டு வசதி கொள்கையை வகுத்து உள்ளது. அதன்படி நகர்ப் புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு மாதந்தோறும்,  மத்திய அரசே வீட்டு வாடகை வழங்க முடிவு செய்துள்ளது.

2009-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகர்ப் புறங்களில் 35 சதவீதம் மக்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஆனால்,  2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் அது 27.5 சதவீதமாக குறைந்ததுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும்  மத்திய அரசு கொண்டுவந்துள்ள  ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் 100 நகரங்களை தேர்வு செய்துள்ளது. அந்த நகரங்களில் வீட்டு வாடகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த திட்டம் முதல் கட்டமாக 3 ஆண்டுகளுக்கு  செயல்படுத்த இருப்பதாகவும்,  இதற்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.2713 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

நடப்பு 2017-18-ம் நிதி ஆண்டு முதல் இந்த திட்டம் அமலுக்கு வர இருப்பதாகவும்,  நகர்ப்புறங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு மாதந்தோறும் வீட்டு வாடகைக்கான தொகை வவுச்சர் முலம் வழங்கப்படும் என்றும், அந்த வவுச்சரை பயனாளர்கள் வங்கியில்  செலுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம்.

நகரங்களில் ஒருவருக்கு பல வீடுகள் இருப்பதும், பினாமி பெயர்களில் வீடுகள் வாங்கி வைத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும்,  பினாமி ஒழிப்பு சட்டம் கொண்டு வருவதன் மூலம் பினாமி பெயர்களில் இருக்கும் வீடுகளை மத்திய- மாநில அரசுகள் கைப்பற்ற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்ததும் முதல் கட்டமாக வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு வாடகை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அதைத்தொடர்ந்து பினாமி சொத்துக்களை கைப்பற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகத் தரம் உயர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.