சென்னை,

டந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது   கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த  ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் என யெரிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதையடுத்து கடும் வறட்சி நிலவி வருகிறது.  தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கிராமப் புறங்களில் விவசாயம் பொய்த்துப் போனது. இந்நிலையில், தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக தமிழக விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவர்களின் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தக்கோரி கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து   100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தைத் மேலும் 50 நாட்கள் நீட்டித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

‘மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்தில் 150 நாள் வேலைக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. தமிழக அரசின் கோரிக்கைப்படி கூடுதலாக 50 நாட்கள் வேலை தர மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள குட்டைகள், ஏரிகள் தூர்வாரப்படும். பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் வேலை நாட்கள் நீட்டிப்பால் 1.23 கோடி கிராம தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.