தமிழகத்தில் மேலும் 110 எண்ணை கிணறுகளை தோண்ட மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்திருப்பது, தமிழகத்தை தொடர்ந்து திட்டமிட்டே மத்திய அரசு வஞ்சித்து வருவது தெள்ளத்தெளிவாகிறது.

ஏற்கனவே பருவமழை பொய்த்து போனதாலும், அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர மறுப்பதாலும் காவிரி டெல்டா மாவட்டங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது.

அந்த பகுதிகளில் இருந்து மீத்தேன் இயற்கை எரிவாயு எடுப்பதாகவும், நியூட்ரினோ ஆய்வு செய்வதாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதாகவும் மத்திய அரசு வரிந்துகட்டிக்கொண்டு செயலில் இறங்கி உள்ளது.

அந்த பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த முனைப்புடன் உள்ளது.

ஹைட்ரோ கார்பன் புராஜக்ட்

தமிழக அரசின் கையாலாகததனத்தை பயன்படுத்தி, மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்கள் அனைத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் மேலும் 110 எண்ணெய்க்கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம்  திட்டமிட்டுள்ளது.

மக்களின் எதிர்ப்பு காரணமாக பல இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் தனது திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

நியூட்ரினோ ஆய்வு

இதையடுத்து, மக்கள் விரோத திட்டங்களை தமிழக மாவட்டங்களில் செயல்படுத்த, போலீஸ் பாதுகாப்பு கோரி மத்திய அரசின் ஓஎன்ஜிசி அதிகாரிகள் தமிழக டிஜிபியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

ஏற்கனவே நெல்விளையும் பூமியான தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமப்பகுதிகளில் விவசாய நிலங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்குழாய் கிணறு அமைத்தன் பயனாக அந்த பகுதிகளில் விவசாயம் அடியோடு அழிந்துள்ளது.

 

இதற்கிடையில் சமீபத்தில் மீண்டும் அந்த பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டத்திற்கான ஆய்வு தொடங்க இருப்பதாக தகவல் பரவியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்து ஓஎன்ஜிசியின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தினர்.

இதற்காரகமாண, தற்போது காவல்துறை பாதுகாப்புடன் மேலும் 110 எண்ணெய் கிணறுகளை அமைக்க மத்திய அரசு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கினை தமிழகத்தில் செயல்படுத்த முனைந்து வருவதை பார்க்கும்போது, தமிழகம், மக்கள் வாழத் தகுதியற்ற  பாலைவனமாகி விடும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

மீத்தான் ஆய்வின் பயனாக வெளியான எண்ணை படங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலம்

இதே நிலை நீடித்தால், நாட்டின் தென்கோடி பகுதியான தமிழகம் இன்னும் 10ஆண்டுகளில் மனிதன் வாழ தகுதியற்ற பகுதியாக மாறிவிடும் அவலம் ஏற்படுவதை தவிர்க்க முடியாததாகி விடும்.

ஏற்கனவே தமிழக பாரதியஜனதாவை சேர்ந்த இல.கணேசன், ‘நாடு வளம்பெற மக்கள் தனி மனிதர் என்ற எல்லையை விட்டு வெளியேறி தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்’ என்று கூறியதை நாம் தற்போது நினைத்து பார்த்தோமானால், மத்திய அரசு திட்டமிட்டே தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சித்து வருவது மீண்டும் நிரூபணமாகிறது.

ஆனால், மத்திய அரசோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியுட்ரினோ திட்டங்களால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்து வருகிறது.

மத்தியஅரசின் புளுகு மூட்டைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டை கூற வேண்டுமானால்,

தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் ஏற்பட்ட கச்சா எண்ணை கசிவு காரணமாக இதுவரை அந்த பகுதியில் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு, அதை சரி செய்ய இயலாத நிலையே இன்றுவரை நீடித்து வருகிறது.

ஓஎன்ஜிசி ஆய்வின் காரணமாக வெளியாகி உள்ள எண்ணை கழிவு (விவசாய நிலங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது)

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில்,  கடந்த 2013ம் ஆண்டு குடிநீரில் எண்ணை கசிவு வந்ததை தொடர்ந்து ஆய்வு செய்தபோது, சென்னை துறைமுகத்திலிருந்து பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) நிறுவனத்துக்கு குழாய் மூலமாக கச்சா எண் ணெய் கொண்டு செல்லப்படும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கசிந்து நிலத்தடி நீர் மற்றும் மண் பாதிக்கப்பட்டு தண்டையார் பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையே நீடித்து வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக இதுகுறித்து மத்திய அரசு நிறுவனங்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டும், நிலத்தடி நீரில் கலந்துள்ள எண்ணை மாசுவை அகற்ற முடியவில்லை என்பது நாடறிந்த உண்மை.

இதுகுறித்து பல்வேறு வழக்குகள் பசுமை தீர்ப்பாயம், கோர்ட்டுகளில் இன்றும் நடைபெற்று வருகிறது….

சென்னை (தண்டையார்பேட்டை)யில் நிலத்தடி நீர் பாதிப்புக்கு ஆளான எண்ணை கசிவு

ஆனால் என்ன பயன்…. இன்னும் அந்த பகுதி மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கியே பயன்படுத்தி வருகிறார்கள்… நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலையே நீடித்து வருகிறது.

படிப்பறிவு நிறைந்த தலைநகர் சென்னையிலேயே, எண்ணை கசிவை தடுக்க முடியாத மத்திய அரசு அதிகாரிகளும், நிறுவனங்களும், டெல்டா பகுதிகளில் எண்ணை எடுப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று சொல்வது என்பது கொக்கு தலையில் வெண்ணை வைப்பதற்கு சமம்.

தமிழக அரசின் தகுதிற்ற தலைமையின் காரணமாக தமிழக அரசு தடுமாறிக்கொண்டிருக்கும் வேளையில், எதிர்க்கட்சியினரும் ஒற்றுமையுடன் செயல்படாத காரணங்களால் மத்தியஅரசு தனது ஆய்வுகளை திட்டம்போட்டே தமிழகத்தில் செயல்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருவது வெட்டவெளிச்சமாகிறது….

இது தமிழகத்தின் சாபக்கேடுபோலும்….