தேவையான ஒத்துழைப்பு தருகிறது மத்திய அரசு!: கேரள முதல்வர் பினராயி விஜயன் 

கேரளாவில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு தேவையான ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் அம்மாநில முதல்வர்  பினராயி விஜயன் கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு  கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேட்டியளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

“வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளது. மீட்புப் பணியில் 22 ஹெலிகாப்டர்கள், கடற்படையை சேர்ந்த படகுகள், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பை சேர்ந்த 57 படகுகள், கடலோர காவல்படையைச் சேர்ந்த 35 படகுகள், 600 தனியார் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எல்லை பாதுகாப்புப் படையினர், ராணுவ பொறியியல் குழுவினர், தமிழகம் மற்றும் ஒரிசாவில் இருந்து வந்துள்ள தீயணைப்புப் படையினர், காவல்துறையினர், தொண்டு அமைப்பினர் என பல்வேறு தரப்பினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓணம் பண்டிகைக்காக மக்கள் தயாரான நிலையில் எதிர்பாராத விதமாக பெருமழை மாநிலத்தை ஆட்டி படைத்துவிட்டது. அப்பண்டிகைக்காக அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு ஏற்கனவே வந்த நிலையில், தற்போது பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அவற்றை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் வெள்ளத்தால் இதுவரை 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.  இங்கு நடைபெறும்  வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு தேவையான ஒத்துழைப்பை அளித்து வருகிறது” என்று கேரள முதல்வர்  பினராயி விஜயன் தெரிவித்தார்.